இந்தியத் திரையுலகின் எல்லைகளைத் தாண்டி உலக அளவில் தனது நடிப்புத் திறமையால் தொடர்ச்சியாகச் சாதனைகளைப் படைத்து வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சர்வதேச அரங்கில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைக்கத் தயாராகி வருகிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் நவம்பர் 23ஆம் தேதி நடைபெறவுள்ள 54ஆவது சர்வதேச எம்மி விருதுகள் விழாவில், உலகப் புகழ்பெற்ற அந்த மேடையில் நின்று அதிகாரப்பூர்வமாக விருது வழங்கும் கௌரவத்தைப் பெறும் முதல் இந்திய நடிகர் என்ற மாபெரும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதுவரை எந்தவொரு இந்திய நடிகரும் எட்டாத இந்தச் சிகரத்தைத் தொட்டுள்ளதன் மூலம், தமிழ் சினிமா உலக வரலாற்றில் மீண்டும் ஒரு பொன்னான அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார் விஜய் சேதுபதி. அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்பட்டு உலகளவில் ஒளிபரப்பப்படும் மிகச் சிறந்த தொலைக்காட்சித் தொடர்கள், நிகழ்ச்சிகள் மற்றும் கலைஞர்களைக் கௌரவிக்கும் உலகின் உயர்ந்த அமைப்பாக சர்வதேச எம்மி விருதுகள் விளங்குகிறது.
இந்த உயரிய விருது வழங்கும் விழாவின் பிரதான மேடையில் உலகத் திரைப்படத் துறை ஜாம்பவான்களுடன் இணைந்து விஜய் சேதுபதி பங்கேற்பதுடன், வெற்றியாளர்களுக்கு விருதுகளையும் வழங்கவுள்ளார். இந்நிகழ்வு இந்தியத் திரையுலகிற்குக் கிடைத்த மகுடம் சூட்டியது போன்ற பெருமைமிக்க தருணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (NewsMe)

















