தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதியளவில் வளிமண்டலத்தில் கீழ்மட்ட காற்றழுத்தத் தளம்பல் நிலை ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவ.26) பிற்பகல் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன் தாக்கத்தினால் நவம்பர் 30ஆம் திகதியளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைச் சூழவுள்ள பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதிகளில் குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 2ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியை அண்மித்த பகுதிகளில் இது மேலும் வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான குறைந்த சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, இன்று (நவ.26) கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில், அடுத்த 168 மணித்தியாலங்களுக்குள் இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிடுகிறது.
எனவே, மீனவர்கள் மற்றும் கடல்சார் தொழிலில் ஈடுபடுவோர் இந்த வானிலை மாற்றம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. (NewsMe)
Listen to this news




















