பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவிற்கு (FCID) அழைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் ரோஹித்த ராஜபக்ஸ, நான்கு மணிநேர விசாரணையின் பின்னர், அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இன்று (நவ.26) காலை பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவிற்கு வருகைத் தந்திருந்தார்.
”SupremeSAT” செயற்கை கோள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
”எந்தவொரு குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இவர்கள் குற்றம் சுமத்தவில்லை. அவர்கள் அவர்களின் கடமையை செய்தார்கள். யாராவது ஆவணமொன்றை திறந்தவுடன், அதற்காக தகவல்களை பெற்றுக்கொண்டு, அந்த ஆவணத்தை பூர்த்தி செய்து நிறைவு செய்ய வேண்டும். அதற்கான முழுமையாக ஆதரவை வழங்குவோம். மோசடி இடம்பெற்றதாக எந்தவொரு குற்றச்சாட்டும் சுமத்தவில்லை. தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக மாத்திரமே வர சொல்லியிருந்தார்கள். மீண்டும் வருமாறு சொல்லவில்லை. தேவையேற்படுமாக இருந்தால், வந்து ஒத்துழைப்புக்களை வழங்குவோம்.” என ரோஹித்த ராஜபக்ஸ, வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்தார்.
இதேவேளை, நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மஹிந்த. ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஸவிற்கு எதிராக சட்ட மாஅதிபரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 03ம் திகதி வரை ஒத்தி வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இன்று (நவ.26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, நீதிமன்றில் யோஷித்த ராஜபக்ஸ முன்னிலையாகியிருந்தார்.
ஆரம்பகட்ட சாட்சியங்கள் பதிவு செய்துக்கொள்ளப்பட்டதை அடுத்து, மேலதிக சாட்சி விசாரணைகளை எதிர்வரும் 03ம் திகதி முன்னெடுக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது (NewsMe)




















