சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பல நாட்களாக தேடப்பட்டு வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் டுபாயிலிருந்து இன்று நாடு கடத்தப்பட்டார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட சந்தேக நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
சந்தேக நபர் 26 வயதுடைய அநுராதபுரம் ஹெலம்பகஸ்வௌ பகுதியைச் சேர்ந்தவராவார்.
கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும்போது 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 08 ஆம் திகதி T56 ரக துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களை திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்றுக்கு வழங்கியதாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல் மாகாண தெற்குக்குப் பொறுப்பான குற்றவியல் விசாரணைப் பிரிவு மேற்கொண்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. (NewsMe)




















