எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஏற்பட்ட எரிபொருள் தாங்கி விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பரபரப்பான நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றிச்சென்ற கனரக லொறி கவிழ்ந்து தீப் பிடித்துள்ளது. இதனையடுத்து அருகில் உள்ள வாகனங்களுகக்கும் தீ வேகமாக பரவியுள்ளது.
இதன்போது 27 வாகனங்கள் தீயில் சேதமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேவேளை, கடுமையாக எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காண மரபணுச் சோதனை நடத்தப்படுகிறது.
எகிப்தில் கடந்த ஆண்டு வாகன விபத்துகளில் சுமார் 6,000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. (NewsMe)



















