டகாடா (Takata) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட குறைபாடுடைய ஏர்பேக் உதிரிப்பாகங்கள் வெடிப்பதன் மூலம் பாரிய காயங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக, அமெரிக்காவில் சுமார் 16 இலட்சம் வாகனங்களை மீளப் பெறுவதாக ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனங்களான ஹோண்டா மற்றும் டொயோட்டா அறிவித்துள்ளன.
குறிப்பிட்ட சில கார்கள், SUV ரக வாகனங்கள் மற்றும் ட்ரக் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஏர்பேக் உதிரிப்பாகங்கள் செயலிழக்கும் அபாயம் தொடர்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை (நவ.20) இந்த மீளப்பெறல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏர்பேக் செயல்படும் சந்தர்ப்பத்தில் அதன் உட்புறத்தில் உள்ள காற்றுப்பை விரிவாக்கி (Airbag Inflator) வெடிக்கக்கூடும் என அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) தெரிவித்துள்ளது.
இதன்போது கூர்மையான உலோகத் துண்டுகள் வாகனத்தின் உட்பகுதிக்குள் சிதறி, சாரதி மற்றும் பயணிகளுக்குப் பாரிய காயங்களை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாகவும் அந்த நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதற்கமைய, ஹோண்டா நிறுவனம் தனது ஹோண்டா மற்றும் அகுரா (Acura) ரகங்களைச் சேர்ந்த 810,592 வாகனங்களை மீளப் பெறுகிறது.
அதேவேளை, டொயோட்டா நிறுவனம் குறிப்பிட்ட சில டொயோட்டா மற்றும் லெக்ஸஸ் (Lexus) ரக வாகனங்களையும் மீளப் பெறுவதாக அறிவித்துள்ளது.
டகாடா ஏர்பேக் உதிரிப்பாகங்களில் பயன்படுத்தப்படும் இரசாயன உந்துசக்தி (Chemical Propellant), நீண்டகாலமாக அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதத்திற்கு உள்ளாகும்போது நிலையற்ற தன்மையை அடைந்து சிதைவடைவதே இந்தப் பாதுகாப்பு குறைபாட்டுக்குக் காரணமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த அண்மைய அறிவிப்புகள், டகாடா ஏர்பேக் தொடர்பில் நீண்டகாலமாக உலகளாவிய ரீதியில் நிலவி வரும் பாதுகாப்புப் பிரச்சினையின் ஒரு பகுதியாகும்.
கடந்த பத்தாண்டுகளில், அமெரிக்காவில் மாத்திரம் சுமார் 6.7 கோடி வாகனங்கள் உட்பட உலகளாவிய ரீதியில் 10 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் டகாடா ஏர்பேக் உதிரிப்பாகங்கள் தொடர்பான பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக மீளப் பெறப்பட்டுள்ளன.
எனினும், இந்தப் புதிய மீளப்பெறல் நடவடிக்கைக்கு உட்பட்ட வாகனங்கள் தொடர்பில் இதுவரை எந்தவொரு விபத்தும், காயமும் அல்லது ஏர்பேக் வெடிப்புச் சம்பவமும் பதிவாகவில்லை என வாகன உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
குறைபாடுடைய உதிரிப்பாகங்களுக்குப் பதிலாக புதிய உதிரிப்பாகங்களைப் பொருத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஹோண்டா நிறுவனம் மீளப் பெறும் வாகனங்களில் 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட சில அகோர்ட் (Accord), சிவிக் (Civic), CR-V, அகுரா ILX மற்றும் அகுரா RDX ஆகிய ரக வாகனங்கள் உள்ளடங்குகின்றன.
அதேபோன்று, டொயோட்டா நிறுவனத்தின் மீளப்பெறல் நடவடிக்கையில் குறிப்பிட்ட சில கொரோலா (Corolla), டன்ட்ரா (Tundra), செகோயா (Sequoia), 4ரன்னர் (4Runner) மற்றும் தெரிவு செய்யப்பட்ட லெக்ஸஸ் ரக வாகனங்களும் உள்ளடங்குகின்றன.
டொயோட்டா நிறுவனத்தின் இந்த மீளப்பெறல் நடவடிக்கை, அமெரிக்காவில் சுமார் 314,000 வாகனங்கள் உட்பட உலகளாவிய ரீதியில் சுமார் 790,000 வாகனங்களைப் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான மாற்று ஏர்பேக் உதிரிப்பாகங்களை 2027ஆம் ஆண்டின் முதல் பாதிக்குள் வழங்க முடியும் என டொயோட்டா நிறுவனம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (NewsMe)



















