வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (நவ.23) தேசிய எதிர்ப்பு தினமாக அறிவிக்க பல தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்த உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் இணையவுள்ளனர்.
அனைத்து அரச ஊழியர்களுக்கும் 25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக, அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அனுராத செனவிரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று கறுப்பு ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வருகை தரவுள்ளதாக அதிபர் தரத்திலான உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்தார்.
மேலும், தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் வர்க்கத்தைப் புறக்கணித்து செயற்படுவதே இவ்வாறான பிரச்சினைகளுக்குக் காரணம் என அகில இலங்கை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் உதேனி திசாநாயக்க குறிப்பிட்டார்.
அத்துடன், வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கோ அல்லது சுகாதார சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கோ எவ்வித தீர்வையும் வழங்க அரசாங்கம் தவறியுள்ளதாக இன்று முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் லசித கன்னங்கர தெரிவித்தார்.
இதற்கிடையில், அரசாங்க தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் முன்வைத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறினால், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய குறிப்பிட்டார்.
இதேவேளை, அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த ஆகியோரும் வலியுறுத்தினர். (NewsMe)




















