இலங்கை தொடர்பான இந்தியாவின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து சர்வதேசத்தின் கவனம் வெகுவாக திரும்பியுள்ளது.
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, விரைவில் இலங்கையிலிருந்து வெளியேறவுள்ள நிலையில், அடுத்ததாக இலங்கைக்கு இந்தியாவினால் நியமிக்கப்படவுள்ள உயர்ஸ்தானிகர் யார் என்பது தொடர்பிலேயே தற்போது உலக நாடுகளில் கவனம் திரும்பியுள்ளது.
உலகில் பூகோள அரசியலில் இலங்கை மிக முக்கிய பங்கை வகித்து வருகின்றது.
இந்து சமுத்திரத்தின் முக்கிய வகிபாகத்தை வகிக்கும் இலங்கை, சர்வதேச நாடுகளின் முக்கிய தளமாக விளங்குகின்றது.
இந்த நிலையில், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் தமது முழுமையான கவனத்தை இலங்கை மீது திரும்பியுள்ள மிக முக்கிய தருணத்தில், இந்தியா இலங்கையை விட்டுக் கொடுக்காது, இந்த சமுத்திரத்தின் வல்லரசாக விளங்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.
இலங்கைக்கான சீன மற்றும் அமெரிக்க தூதுவர்கள் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் மாற்றப்பட்டிருந்தனர்.
இந்த இரண்டு தூதுவர்களின் பதவிக் காலங்களும் நிறைவடைந்த தருணத்திலேயே இவர்கள் மாற்றப்பட்டிருந்தாலும், இது இந்த தருணத்தில் மிக முக்கியமானது என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.
‘வரலாற்றில் இதுவரை இலங்கையில் அமெரிக்கத் தூதுவர் ஒருவர் புதிதாக நியமிக்கப்படும் அதே வேளையில், பிரதித் தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டதில்லை’ எனக் கூறப்படுகிறது. எனினும், முதல் தடவையாகப் பிரதித் தூதுவரும் நியமிக்கப்பட்டு உள்ளமை, அரசியல் ரீதியில் பல்வேறு கேள்விகளை எழுப்பும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
அதேவேளை, இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவராக வீ ஹுவாசியாங் அண்மையில் நியமிக்கப்பட்டு, அவரும் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டிருந்தார்.
அமெரிக்கா மற்றும் சீனாவினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த இருவரும் ராஜதந்திரிகள் மாத்திரமன்றி, கடல்சார் துறையில் வல்லுநர்கள் என்பதுடன், அவர்கள் வலுசக்தி சார் துறையிலும் வல்லுநர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
உலக நாடுகளுக்கு இடையே எரிபொருள் உள்ளிட்ட வலுசக்தி சார்ந்த போட்டி வலுத்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் இலங்கைக்கு வலுசக்தி மற்றும் கடல்சார் வல்லுநர்களைத் தமது தூதுவர்களாக நியமித்திருப்பது, பாரிய சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம்

இலங்கைக்கான அமெரிக்க மற்றும் சீன ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியேற்றுக்கொண்ட நிலையில், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், செப்டம்பர் மாதம் அவசரமாக இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
உலகில் வல்லரசு நாடுகள் மத்தியில் நிலவும் வலுசக்தி மற்றும் கடல்சார் போட்டித்தன்மைக்கு மத்தியில், புதிய தூதுவர் நியமனமானது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்ற அச்சம் நிலவிய தருணத்திலேயே இந்த விஜயம் இடம்பெற்றிருந்தது.
இந்தியா அயல் நாடாக இருந்த போதிலும், அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் குறிப்பாக 38 வருடங்களின் பின்னர் இந்த தருணத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமையை இலகுவாக விடயம் என்று எண்ணி கடந்து செல்ல முடியாது.
வலுசக்தி மற்றும் கடல்சார் போட்டித்தன்மைக்கு மத்தியில், அதன் வல்லுநர்களை சீனாவும், அமெரிக்காவும் இலங்கைக்கு நியமித்த நிலையில், இந்தியாவும் அதற்கு நிகரான ஒருவரை இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சந்தோஷ் ஜா, எதிர்வரும் சில தினங்களில் இலங்கையிலிருந்து விடைப் பெறவுள்ள நிலையில், சீனாவையும், அமெரிக்காவையும் எதிர்கொள்ளக்கூடிய, கடல்சார் மற்றும் வலுசக்தி போட்டித்தன்மைக்கு தகுதியான ஒருவரை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி, இந்த தருணத்தில் ராணுவ பின்புலன் அல்லது பாதுகாப்பு துறையிலும் தேர்ச்சியாக ஒருவரின் நியமனமானது, இந்தியாவிற்கு அத்தியாவசியமாக காணப்படுகின்றது என அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
பாதுகாப்பு துறையில் வல்லமைப் பெற்ற, வலுசக்தி மற்றும் கடல்சார் துறையில் வல்லமைப் பெற்ற ஒருவரை தேர்வு செய்யும் செயற்பாடு தற்போது மிக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மாத்திரமன்றி, யாழ். துணை தூதரகத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட சிலரும் இலங்கையிலிருந்து விடைப் பெறவுள்ளனர்.
இவர்களின் பதவிக் காலம் முடிவடைந்த அவர்கள் செல்கின்றார்கள் என்றாலும், இந்த தருணத்தில் புதிய நியமனங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளே கவனம் செலுத்தி வருகின்றன.
ரில்வின் சில்வாவின் இந்திய விஜயம்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து, இந்தியா சென்ற அடுத்த சில வாரங்களில் இலங்கையின் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் தாய் கட்சியாக விளங்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அவசரமாக இந்தியாவிற்கு சென்றிருந்தார்.
இந்தியாவிற்கு சென்ற ரில்வின் சில்வா, இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார்.
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்படவுள்ள இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டிருக்கலாம் என அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
சீனா மற்றும் அமெரிக்காவின் இலங்கைக்கான புதிய தூதுவர் நியமனங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
இந்தியாவின் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலத்தின் கடமையாற்றிய ஒருவர். இலங்கை அரசியல் தொடர்பில் அதிகளவில் தெளிவுப் பெற்ற ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளருக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இந்த பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டிருந்தது.
இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பேச்சுவார்த்தையாக அமைந்திருக்கக்கூடும் என சொல்லப்படுகின்றது.
இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரியும், இலங்கைக்கான விஜயத்தை அண்மையில் மேற்கொண்டிருந்தமை மிக முக்கியத்துவம் வாய்ந்தமாக அவதானிக்கப்பட்டது.
இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகரை நியமிப்பதற்கான இலங்கையின் கள நிலவரங்களை ஆராயும் நோக்கமும் இந்த விஜயங்களில் காணப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
வலுசக்தி சார் போட்டியில் இலங்கை சிக்குவது ஏன்?

சர்வதேச வலுசக்தி சார் போட்டியில் இலங்கை ஏன் சிக்குகின்றது என்ற கேள்வி பலருக்கும் எழுந்த வண்ணமே உள்ளது. குறிப்பாக உலகின் வல்லரசு நாடுகள் இலங்கையை மையப்படுத்திய ஒரு அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க, இலங்கையைச் சூழவுள்ள கடல் மிக முக்கியப் பங்கை வகிக்கிறது.
வலுசக்தி சார்ந்த பரிமாற்று நடவடிக்கைகளில், 35 சதவீதப் பரிமாற்றங்கள், இலங்கை மற்றும் இலங்கையை அண்மித்த கடலிலேயே முன்னெடுக்கப்படுவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாகக் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளில் இலங்கை மற்றும் இலங்கையை அண்மித்த கடல்பரப்பைப் பயன்படுத்த வேண்டிய ஒரு கட்டாயம் உள்ளது. பாக்கு நீரிணையை அண்மித்த பகுதிகளில் ‘எடம்ஸ் பிரிட்ஜ்’ என, அழைக்கப்படும் கற்பாறைகள் காணப்படுகின்றன. இதனால் அந்தக் கடல் வழியாகக் கப்பல் போக்குவரத்து சாத்தியமற்றதாகிறது. அதனால், இலங்கைத் தீவைச் சுற்றியே போக்குவரத்து மேற்கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது. இதனால், வலுசக்தி சார் பரிமாற்றங்களில் இலங்கை முக்கிய மையப்புள்ளியாகக் காணப்படுகின்றது.
உலகளாவிய வர்த்தகம் சார் நடவடிக்கைகளுக்கு இலங்கை மிக முக்கிய பங்கை வகிக்கிறது. இதனால் சர்வதேச நாடுகளின் கவனத்தை, ஒவ்வொரு நொடியும் இலங்கை ஈர்த்துக்கொண்டே இருக்கின்றது. இதனால் தான் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் இலங்கையின் அரசியலில் தலையீடு செய்துகொண்டே இருக்கின்றன.
பங்களாதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் இந்தியாவிற்கு எதிராக செயற்படுவதனால், இலங்கையை தனது கையில் வைத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
இலங்கை விடயங்களில் இந்தியா இதற்கு முன்னர் தலையீடு செய்ததை விடவும், பல மடங்கு அதிகமாக தற்போது தலையீடு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக அவதானிக்கப்படுகின்றது. (NewsMe)




















