யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி தெரிவிக்கிறார்.
பொலிஸாரினால் நடத்தப் படும் விசாரணைகளுக்கு மேலதிகமாக, பல்கலைக்கழக நிர்வாகமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறுகிறார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பீட மாணவ குழுக்களுக்கு இடையில் கடந்த 19ம் திகதி இந்த மோதல் ஏற்பட்டிருந்தது.
இந்த மோதல் சம்பவமானது மாணவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றதுடன், மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பில் மேலும் சில மாணவர்கள் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மோதல் சம்பவம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு வெளியில் நடந்திருந்தாலும், பொலிஸாரின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பல்கலைக்கழக உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி தெரிவிக்கிறார்.
(NewsMe)




















