இளைய சமூகத்தினர் மத்தியில் பிரபல்யமாகியுள்ள பச்சைக்குத்துதல் (TATTOO) தொடர்பில் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரமொன்று அவசியம் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கின்றார்.
”TATTOO என்றழைக்கப்படும் பச்சைக்குத்தும் கலையானது, இலங்கையிலுள்ள இளைஞர்கள் மத்தியில் தற்போது பிரபல்யமாகி வருகின்றது. எமது நாட்டில் மாத்திரமல்ல, மேற்குலக நாடுகளிலும் பச்சைக்குத்தும் கலையானது மிகவும் பிரபல்யமானது. வெளிநாடுகளுக்கும், எமது நாட்டிற்கும் இடையில் பச்சைக்குத்தும் கலையில் பாரிய வேறுப்பாடு காணப்படுகின்றது.” என அவர் கூறுகின்றார்.
மேற்குலக நாடுகளில் பச்சைக்குத்தும் கலையானது உரிய தரத்திற்கும், பயிற்சிகளுடனும் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் அவ்வாறான தரமொன்றும், பயிற்சிகள் இன்றியும் பச்சைக்குத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றமை பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது எனவும் அவர் கூறுகின்றார்.
”எமது நாட்டில் பச்சைக்குத்தும் போது எந்தவொரு பொறுப்பும் கிடையாது. எந்தவொரு சோதனைகளும் இன்றி, எந்தவொரு நபருக்கும் பச்சைக்குத்த முடியும். பச்சைக்குத்துவதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்ன? அந்த உபகரணம் உரிய முறையில் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளதா? என்பன குறித்து எந்தவொரு அவதானமும் செலுத்தப்படுவதில்லை” என உபுல் ரோஹண குறிப்பிடுகின்றார்.
;”பச்சைக்குத்தும் வர்ணப்பூச்சிகள் உடலுக்கு உகந்தவையா? அந்த வர்ணப்பூச்சிகள் காலாவதியானவையா? அந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு எந்தவொரு நபருக்கும் தேவையில்லை. இறுதியில் சர்மம் முழுவதும் சர்ம நோய் வந்தவுடனேயே அதற்கான தேவை ஏற்படும்” என அவர் கூறுகின்றார்.
”வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ மத்திய நிலையங்களிலுள்ள உபகரணங்கள் உரிய முறையில் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன. எனினும், சில சந்தர்ப்பங்களில் சிலருக்கு அதனால் ஒவ்வாமை ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. அவ்வாறென்றால், கிருமி நீக்கம் செய்யப்படாது பயன்படுத்தப்படுகின்ற அவ்வாறான உபகரணங்களில் எந்தளவு ஒவ்வாமைக்கான கிருமிகள் காணப்படக்கூடும் என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும்” என உபுல் ரோஹண குறிப்பிடுகின்றார்.
பச்சைக்குத்தும் கலையை முன்னெடுக்க வேண்டாம் என்று தம்மால் ஒருபோதும் கூற முடியாது என குறிப்பிட்ட அவர், அந்த கலையானது உரிய தரத்திற்கு அமைய, பயிற்சிப் பெற்றவர்களினால் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். (NewsMe)




















