மரக்கறி வகைகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதை அடுத்து, மரக்கறி விற்பனையாளர்கள் மாத்திரமன்றி, நுகர்வோரும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையுடனான வானிலையை அடுத்து, மரக்கறி செய்கைகள் பெருமளவில் சேதமடைந்திருந்தது.
மரக்கறிக்கான கேள்வி அதிகரித்த நிலையில், விநியோகிப்பதற்கு போதுமான மரக்கறி இல்லாமையினால் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், ஒரு கிலோகிராம் கறி மிளகாய் 950 ரூபாவிலிருந்து 1000 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
கத்திரிகாய் ஒரு கிலோகிராம் 500 ரூபாவிற்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 800 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் அதேவேளை, பொஞ்சி ஒரு கிலோகிராம் 450 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
கேரட் ஒரு கிலோகிராம் 600 முதல் 700 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
அதேவேளை, பூசணிக்காய் (வட்டக்காய்) ஒரு கிலோகிராம் 400 ரூபாவிற்கும், வாழைக்காய் ஒரு கிலோகிராம் 400 ரூபாவிற்கும், கோவா ஒரு கிலோகிராம் 600 முதல் 650 ரூபாவிற்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோகிராம் 350 ரூபாவிற்கும், தக்காளி ஒரு கிலோகிராம் 800 ரூபாவிற்கும் பாகற்காய் ஒரு கிலோகிராம் 800 ரூபாவிற்கும், நுவரெலியா உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 450 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோகிராம் எலுமிச்சை பழம் 2000 ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக அறிய முடிகின்றது.
மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளமையினால், மரக்கறி கொள்வனவு நுகர்வோர் மத்தியில் குறைவடைந்துள்ளதை அடுத்து, வியாபாரிகளும் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக மரக்கறி வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர். (NewsMe)




















