தனக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை நீக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த உத்தரவு இன்று (நவ.25) பிறப்பிக்கப்பட்டது.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது சட்டத்தரணிகளின் ஊடாக மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வூப் பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மீதான விசாரணைகள் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடாத்தப்பட்டு வருகின்ற பின்னணியிலேயே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு இந்த வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (NewsMe)




















