அநுராதபுரம் புனித பூமியில் இராமர் கோவில் ஒன்றை நிர்மாணிப்பதற்கான எந்தவொரு எண்ணமும் கிடையாது என அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி திட்டம் தொடர்பான ஜனாதிபதி ஆலோசனை குழுவின் இணைத் தலைவரும், ஜனாதிபதி பணிமனை பிரதானியுமான பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவிக்கின்றார்.
அநுராதபுரம் புனித பூமியின் அபிவிருத்தி திட்டம் தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை தெளிவுப்படுத்தும் வகையில் கண்டிக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த தருணத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பகுதியில் இராமர் கோவில் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் கூறுகின்றார்.
அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி பணிகளுக்காக இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு ஜனாதிபதியினால் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், இந்த அபிவிருத்தி பணிகளுக்காக இந்தியாவின் உதவித் திட்டங்களை பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தால், அதற்கான எதிர்ப்பு கிடையாது என மகாநாயக்க தேரர்கள் கூறியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, பௌத்த மத முன்னேற்றத்திற்காக முன்னின்று செயற்படும் ஒருவர் எனவும் மகாநாயக்க தேரர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளதாக பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவிக்கின்றார்.
அதனால், இந்தியாவின் உதவித் திட்டத்தை பெற்று, இந்த அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பை வெளியிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (NewsMe)




















