இந்தியாவில் ஏற்பட்டுள்ள எல்-நினோ நிலைமை மற்றும் கடும் மழையுடனான வானிலை ஆகிய காரணங்களில் சில இறக்குமதி பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிக்கின்றார்.
புறக்கோட்டை அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, அமைச்சர் வசந்த சமரசிங்க ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே இதனைக் குறிப்பிட்டார்.
பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த பேச்சுவார்;த்தை வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு கட்டிடத் தொகுதியில் இன்று (நவ.23) முற்பகல் இடம்பெற்றது.
எதிர்வரும் பண்டிகை காலத்தில் பொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்கும், மாற்று சந்தைகள் தொடர்பில் ஆராய்வதற்கும் அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்;ததாகவும் அவர் கூறுகின்றார்.
காய்ந்த மிளகாய் தவிர்ந்த ஏனைய அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தடையின்றி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருவதற்காக இயலுமை காணப்படுவதாக இறக்குமதியாளர்கள், அமைச்சரிடம் கூறியுள்ளனர்.
காய்ந்த மிளகாயின் ஈரப்பதனின் சதவீதம் அதிகமாக காணப்படுகின்றமையே, காய்ந்த மிளகாய் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பிரதான பிரச்சினை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் உணவு பாதுகாப்பு விதிகளுக்கு அமைய, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் காய்ந்த மிளகாயை, துறைமுகத்திலிருந்து விடுவிப்பதற்காக அதன் ஈரப்பதன் 12 சதவீதத்திற்கு குறைவாக காணப்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.
எனினும், இந்தியாவில் ஏற்பட்டுள்ள எல்-நினோ மற்றும் கடும் மழையுடனான வானிலை காரணமாக காய்ந்த மிளகாயின் ஈரப்பதன் 13 முதல் 14 சதவீதம் வரையான மட்டத்தில் காணப்படுகின்றமையினால், காய்ந்த மிளகாயுடனான கொள்கலன்களை விடுவிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சந்தையில் காய்ந்த மிளகாய்க்கு தட்டுப்பாடு நிலவவில்லை என கூறிய அவர், தரத்தில் காணப்படுகின்ற பிரச்சினை காரணமாக விடுவிக்க முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமை தொடரும் பட்சத்தில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் காய்ந்த மிளகாயின் ஈரப்பதன் தொடர்ச்சியாக அதிகரித்து காணப்படும் அபாயம் எழுந்துள்ளமையினால், எதிர்வரும் மார்ச் மாதம் வரை நடைமுறைப்படுத்தக்கூடிய இடைகால திட்டமொன்று குறித்து கலந்துரையாடல்களை நடாத்துமாறு இறக்குமதியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகின்றார்.
காய்ந்த மிளகாய் போன்ற பொருட்களின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி, அசாதாரணமான முறையில் அந்த பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.
காய்ந்த மிளகாயின் விலை சடுதியாக அதிகரிப்பு
சந்தையில் காய்ந்த மிளகாயின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
இதன்படி, ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாயின் விலை 2500 ரூபாவிற்கு அதிகரித்து விற்பனை செய்யக்கூடிய அபாயம் எழுந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள காய்ந்த மிளகாயுடனான கொள்கலன்களை விடுவிக்க சுங்கத் திணைக்களம் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், எதிர்வரும் நாட்களில் காய்ந்த மிளகாயின் விலை சடுதியாக அதிகரிக்கக்கூடும் என அந்த சங்கத்தின் செயலாளர் பீ.சுப்ரமணியம் தெரிவிக்கின்றார்.
காய்ந்த மிளகாயுடனான சுமார் 120 கொள்கலன்கள் சுங்கத்தின் பொறுப்பில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேவையான ஆவணங்கள் முழுமைப்படுத்தப்பட்டு, சுங்க கட்டணம் செலுத்தப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள போதிலும், தரத்திலுள்ள பிரச்சினைகள் காரணமாக காய்ந்த மிளகாயுடனான கொள்கலன்களை விடுவிக்க முடியாத நிலைமை எழுந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இதற்கு முன்னர் 1,050 ரூபாவாக காணப்பட்ட ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய், தற்போது 2,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமையின் கீழ், காய்ந்த மிளகாய் தூள்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
மூலப் பொருள் தட்டுப்பாடு காரணமாக, பெரும்பாலான தொழிற்சாலைகள் தமது நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இந்த நடவடிக்கை காரணமாக பெரும்பாலான வர்த்தகர்கள் பாரிய நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகவும், காய்ந்த மிளகாயுடனான கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுக்கின்றார். (NewsMe)




















