சட்டவிரோதமான முறையில் அதிசொகுசு வாகனமொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிரான வழங்கின் தீர்ப்பை, கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25) வழங்கியது.
இதன்படி, 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 05ம் திகதி முதல் 2024ம் ஆண்டு ஒக்டோபர் 04ம் திகதி வரையான காலத்திற்குள், பதிவு செய்யப்படாத வாகனமொன்றை பயன்படுத்தி குற்றச்சாட்டிற்காக 5000 ரூபா தண்டபணத்தை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் ஒரு மாத கால ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மோட்டார் வாகன ஆணையாளரின் எழுத்துமூல அனுமதியின்றி, ஒன்றிணைத்து தயாரிக்கப்பட்ட வாகனம் என்பதை அறிந்தும் அதனை பயன்படுத்திய குற்றத்திற்காக ஒரு லட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒரு மாத கால ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், அந்த சிறைத் தண்டனையை ஐந்து வருடங்களுக்கு ஒத்தி வைத்தும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த காலப் பகுதியில் போலி வாகன இலக்கத் தகடு பயன்படுத்திய குற்றத்தின் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு, 25,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், அந்த தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் மூன்று மாத கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. (NewsMe)




















