2026ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நேற்று (நவ.21) வரையான காலம் வரை நாடு முழுவதும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2,463 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் W.P.J.சேனாதீர தெரிவிக்கிறார்.
நாடு முழுவதும் இடம்பெற்ற 2,330 வாகன விபத்துக்களிலேயே இவ்வாறு 2,463 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த காலப் பகுதியில் 5,868 பாரிய விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், இந்த விபத்துக்களில் காயமடைந்தோரில் 50 வீதமானோரை வாழ வைப்பது கடினமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், 9,870 சிறு விபத்துக்கள் நேர்ந்துள்ள அதேவேளை, அவற்றில் 4,488 விபத்துக்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு இடம்பெற்ற விபத்துக்களில் பாதசாரிகளே அதிகளவில் உயிரிழந்துள்ளனர். இதன்படி, 813 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இந்த காலப் பகுதியில் 876 மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் சுமார் 900 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்களில் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் சென்ற 168 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 165 சைக்கிள் ஓட்டுநர்களும், 190 சாரதிகளும், 240 பயணிகளும் வாகன விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வாகன விபத்துக்களின் எண்ணிக்கை 11 வீதத்தால் அதிகரித்துள்ளதுடன், விபத்துக்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எதிர்வரும் நாட்களில் பண்டிகை காலம் வருகின்றமையினால், மதுபோதையில் மற்றும் கவனயினமாக வாகனம் செலுத்தும் சாரதிகள் குறித்து பொலிஸார் அதிக கவனம் செலுத்தவுள்ளதுடன், அவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் W.P.J. சேனாதீர தெரிவிக்கிறார்.
(NewsMe)



















