தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் சுற்றுலா வசதிகளை இலகுப்படுத்துதல் மற்றும் மக்களுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில், சாதாரண கடவுச்சீட்டு உரிமையாளர்களுக்கு விசா விலக்கு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இது இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் காணப்படும் நட்புறவு மற்றும் நெருங்கிய தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் சந்தர்ப்பம் இதுவென ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தாய்லாந்து பிரதி பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் Sihasak Phuangketkeow வுடன் இன்று (நவ.22) நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று, கலாசார மற்றும் மத உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை ஆராய்வது குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான துறைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நெருங்கிய உறவுகளையும் உறுதிப்படுத்துவதில் இந்த விசா விலக்கு உடன்படிக்கை ஒரு முக்கிய மைல்கல் என ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். (NewsMe)




















