கண்டி மாவட்டத்தின் கலஹ பகுதிக்கு சொந்தமான ஒரு பின்தங்கிய பிரதேசமே கல்லந்தென்ன.
கலஹவிலிருந்து தெல்தோட்டை செல்லும் பிரதான வீதியிலிருந்து கல்லந்தென்ன பகுதிக்கு செல்லும் வீதி பிரிகின்றது.
பிரதான வீதியிலுள்ள சுமார் 5 கிலோமீற்றர் தூரத்தில் மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் சுமார் 50 குடும்பங்களைச் சேர்ந்த 200ற்கும் அதிகமானோர் வாழ்ந்து வருகின்றனர்;.
இந்த கிராமத்தில் வாழும் மக்கள் அன்றாடம் வீதி பிரச்சினையையே எதிர்நோக்கி வருகின்றனர்.
வாழ்க்கையில் இன்று வரை தமது கிராமத்திற்கான வீதி கட்டமைப்பை இந்த மக்கள் கண்டமே கிடையாது என்பதே உண்மையான விடயமாகும்.
இந்த கிராமத்திற்கு செல்லம் வீதியின் சிறிய பகுதி மாத்திரம் செப்பணிடப்பட்டுள்ள போதிலும், அந்த பகுதியும் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.
எஞ்சிய பகுதி வரலாற்றில் இன்று வரை அமைக்கப்படவில்லை என்பதே உண்மை.
மலை உச்சிக்கு செல்லும் வீதியானது வெட்டப்பட்டுள்ள போதிலும், குன்றும் குழியுமாக காணப்படுவது மாத்திரமன்றி, சேறு நிறைந்த ஒரு வீதியாகவே உள்ளது.
மாறி மாறி வந்த எந்தவொரு அரசாங்கமும் இந்த மக்கள் தொடர்பில் இன்று வரை கவனம் செலுத்தவில்லை.
பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் அதிகாலை வேளையில் நடந்து பிரதான வீதிக்கு வர வேண்டிய கட்டாயத்தில் காணப்படுகின்றனர்.
அவ்வாறு வருகைத் தரும் மாணவர்கள், பிரதான வீதிக்கு வருகைத் தந்து, தமது பாதணிகளை சுத்தம் செய்த பின்னரே பஸ்ஸில் ஏறி பாடசாலைகளுக்கு செல்கின்றனர்.
மழையுடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் அந்த வீதியில் செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது.
குறிப்பாக தேர்ச்சி பெற்ற சாரதிகள் மாத்திரமே முச்சக்கரவண்டிகளை கல்லந்தென்ன ஊருக்கு செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெரும்பாலான சாரதிகள் கல்லந்தென்ன என்ற இடத்தை கேட்டாலே அங்கு செல்வதற்கு மறுப்பு தெரிவிப்பதே உண்மையாகும்.
இவ்வாறு வாழும் மக்கள் போக்குவரத்து பிரச்சினைகளை எதிர்நோக்குவதனால், நாளாந்தம் பெரும்பாலான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த பகுதியில் நிலவிவரும் கடும் மழையுடனான வானிலையினால் இன்றைய தினம் முச்சக்கரவண்டியொன்று இடைநடுவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதையடுத்து, பாடசாலை மாணவர் ஒருவர் அந்த முச்சக்கரவண்டியை தள்ளிக் கொண்டு வரும் புகைப்படம் NewsMe.lk இணையத்தளத்திற்கு பிரத்தியேகமாக கிடைக்கப் பெற்றது.
இந்த பகுதிக்கு செல்லும் வீதி முழுமையாக அபாயம் நிறைந்துள்ளமையினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி, வீதியை புனரமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்கம் இந்த மக்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இந்த பிரதேச மக்களின் கோரிக்கையாகும்.
(NewsMe)




















