நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (25) இடம்பெற்ற வீதி விபத்துகளில் எண்மர் பலியாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவினால் இன்று காலை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குளியாபிட்டிய
நரம்மல, பூகல்ல சந்தியில் லொறியொன்று மோட்டார் சைக்கிளில் மோதியதில் 73 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
ருவன்வெல்ல
அவிசாவளை-கேகாலை வீதி, மத்தமகொட பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் 47 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கருவாத்தோட்டம்
தர்ஸ்டன் மாவத்தையில் வீதியை கடக்க முயன்றபோது பேருந்து மோதியதில் 66 வயதுடைய பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.
தலங்கம
கியெங்ஹேம சந்தியில் கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது 26 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மஹபாகே
கொழும்பு- நீர்கொழும்பு பிரதான வீதி, கல்உடுபிட்டிய சந்தியில் கார் ஒன்று சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 47 வயதுடைய பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.
கிராண்ட்பாஸ்
கொழும்பு, கிராண்ட்பாஸில் லொறியொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 80 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நோர்வூட்
நோர்வூட் வென்சர் பகுதியில் கெப் ரக வாகனத்தின் பின் பகுதியில் ஏறிப் பயணித்த சிறுமியொருவர் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார். அதன் பின்னர் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் 50 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமியாவார்.
மஹவ
இப்பலோகம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் அதில் பயணித்த 28 வயதுடைய நபர் ஒருவர் பலியாகியுள்ளார். (NewsMe)




















