இந்தியாவில் பல நகரங்களிலும், முக்கியமாக தமிழகத்தில் நூதன முறை மோசடிகள் புதிது புதிதாக நடைபெறுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். சதுரங்க வேட்டை என்று ஒரு திரைப்படமே எடுக்கும் அளவுக்கு ஏராளமான நூதன மோசடிகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. அதே வகைப் பாணியில் கடந்த சில வருடங்களாக இலங்கையும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் ஒரு நூதன மோசடி இடம்பெற்று வருகிறது.
முன்னுக்கு ஏதாவது ஒரு பெயருடன், பின்னொட்டாக ”கிறீன் பிளாண்டேஷன்” என்ற பெயரையும் சேர்த்து ஒரு நிறுவனப் பெயரைப் பதிந்து குறைந்தது ஏழு அல்லது எட்டு நிறுவனங்கள் வடக்கு மாகாணத்தில் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் அலுவலகங்களைத் திறந்துள்ளன.
இவர்களின் பதிவு செய்யப்படட முகவரி கொழும்பு, நீர்கொழும்பு அல்லது கம்பஹா மாவட்டங்களில் உள்ளதாக அவர்களின் விளம்பரப் பதாகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாதாரணமாக அவர்களின் அலுவலகங்களுக்குள் எவராலும் நுழைய முடியாதவாறு தனியார் குண்டர்கள் மூலம் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கண்துடைப்புக்காகவே அலுவலகம் நடைபெறுகிறது. ஆனால் அவர்களின் குறி, அப்பாவி ஏமாளிப் பொதுமக்கள்.
20 முதல் 30 வரையான களப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி, ஆசிரியர்கள், தாதியர்கள், சிறு தொழில் புரிவோர், அரச அலுவலர்கள் போன்றோரை குறிவைத்து, தமது நிறுவனத்தில் முதலீடு செய்யச்சொல்லி மூளைச் சலவை செய்து சம்மதிக்க வைக்கின்றனர்.
உதாரணமாக 10 லட்சம் முதலீட்டால், மாதாந்தம் 40,000 ரூபாய் வருமானமாகவும், 5 வருட முடிவில் முதலிட்ட மொத்தப் பணமும் தருவதாக வாக்குறுதி அளிக்கின்றனர். இந்த ஆசை வார்த்தைகளை நம்பி பேராசை படைத்த ஏமாளிப் பொதுமக்கள் தமது பணத்தை இவர்களிடம் வழங்குகின்றனர். ஆனால் அதற்கான முறையான, சடடரீதியான ஆவணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை என தெரியவருகிறது.
தமது நிறுவனம் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் தென்னிலங்கையில் பழத் தோட்டம் செய்யப்படுவதாகவும், அதற்கான முதலீடே இது எனவும் கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு அவர்களால் கூறப்படும் ஆயிரம் ஏக்கர் தோட்டம் உண்மையில் இயங்குகிறதா என்பது ஒருவராலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
எவராவது விபரம் தெரிந்த நபர்கள், முதலீடு செய்யும்படி வருபவர்களிடம் குறுக்கு கேள்விகள் கேட்கப்பட்டால், அவர்களிடம் இருந்து நைசாக நழுவி விடுகின்றனர். ஏற்கனவே தெரியாத்தனமாக முதலீடு செய்தவர்கள், அவர்களது அலுவலகத்துச் சென்று முறையாக அவர்களிடம் விளக்கம் கேட்கவும் முடியாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இவ்வாறான பல நிறுவனங்கள் அடையாளப்படுத்தப்பட்டு இலங்கை மத்திய வங்கியால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், தற்போது ஓரளவு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும், ஆயிரக்கணக்கான மக்கள் தமது பணத்தை இவர்களிடம் ஏற்கனவே இழந்துள்ளதாக அறியமுடிகிறது. ஆனால் சமூகத்தில் தமது கௌரவம் மற்றும் சுற்றுவட்டத்தில் ஏற்படும் மானப் பிரச்சனை போன்றவற்றால், ஏமாந்த பொதுமக்கள் இன்னும் பொதுவெளியில் தம்மை வெளிக்காட்ட தயங்குவதாக தெரிகிறது.
இந்த நூதனக் மோசடி மூலம் நூற்றுக்கணக்கான கோடி பணம் ஏமாற்றப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவருகிறது. (NewsMe)




















