தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்துவதற்காக கடந்த இரண்டு மாதங்களாக ஜனாதிபதியை சந்திப்பதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் (நவ.21) உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பு, நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயற்பாடுகள், மாகாண சபைத் தேர்தல், க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம், மனித உரிமைகள் மீறல், செம்மணி மனிதப் புதைக்குழி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ராசமாணிக்கம் சாணக்கியன் இதன்போது கருத்து தெரிவித்தார்.
பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்திப்பதற்காக சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தெரிவித்த அவர், அதற்கான இதன்போது தனது நன்றியை வெளியிட்டார்.
அத்துடன், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை கடந்த இரண்டு மாத காலமாக சந்திப்பதற்கு முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.
நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரதான மூன்று பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்துவதற்காகவே ஜனாதிபதியிடம் அனுமதி கோரப்பட்டதாகவும், அதற்கான இதுவரை அனுமதி கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடையாளம் காணப்பட்டுள்ள சில பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதியினால் மாத்திரமே முடியும் என தெரிவித்த அவர், அதற்கான சந்தர்ப்பத்தை விரைவில் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். (NewsMe)




















