நாடு முழுவதும் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளிலும் எதிர்வரும் 2027ம் ஆண்டு முதல் ஒரே பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
இதன்படி, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் அனைத்து மாகாண சபைகளும் ஒன்றிணைந்த வகையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளையும் ஒன்றிணைத்து தற்போது ஒரே பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்காக பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் டொக்டர் நாமல் சுதர்ஷன தெரிவிக்கின்றார்.
அரசியல் ரீதியாகவும், அரச சேவை ரீதியாகவும், பொது போக்குவரத்து ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என பல்வேறு துறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
”இதன்படி, நாட்டிலுள்ள சிறுவர்கள் மற்றும் பெண்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பில் பல்வேறு புதிய திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இதில் பெண் முயற்சியாளர்களை முன்னேற்றுவது, சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே விதத்திலான பாடதிட்டங்களை அறிமுகப்படுத்துவதும் இதில் ஒரு திட்டமாக காணப்படுகின்றது” என அவர் கூறுகின்றார். (NewsMe)




















