இங்கிலாந்தின் சட்டன் ஹூ மயானப் பகுதியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மணல் வடிவ உடல் தோற்றம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இதனை ‘மணல் பேய்’ என ஆராய்ச்சியாளர்கள் வர்ணித்துள்ளனர். அதாவது உடல் போன்ற தோற்றத்தில் மணலாக அது காணப்படுகின்றது.
சஃபோக் அகழ்வுப் பகுதியில் ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள் விசித்திரமான மணல் உடலை கண்டுபிடித்துள்ளனர். இது சுமார் ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த ஒரு நபரின் பேய் போன்ற உருவம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, எலும்புகள் அழிந்தாலும் உடல் தோற்றம் அழியவில்லை. இதற்காக அவர்கள் இறக்கும் முன்பு ஏதேனும் மூலிகைகளைப் பயன்படுத்தினார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நேஷனல் ட்ரஸ்ட் அமைப்பின் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஆங்கஸ் வெய்ன்ரைட் இது பற்றிக் கூறும்போது, உடலில் உள்ள எலும்புகள் ஏதேனும் அமிலத் தன்மையால் கரைந்து கடினமான மணல் படிவங்கள் உருவாகியிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தப் புதைகுழிக்கு அருகில் மணிகள், கத்தி, பதக்கங்கள் உள்ளிட்ட பொருட்கள் காணப்பட்டுள்ளன. அவற்றை ஆராய்ந்து மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். (NewsMe)




















