எயிட்ஸ் அதிவுயர் அச்சுறுத்தல் மிக்க நாடுகள் பட்டியலில் இலங்கை 21வது இடத்திலுள்ளதாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சித்ரன் ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை சுமார் 9000 வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு குருநாகல் மாவட்டத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
எனினும், அடையாளம் காணப்படாமல் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான பலர் சமூகத்திற்குள் இருக்கக்கூடும் எனவும் அவர் அச்சம் வெளியிடுகின்றார்.
”குறிப்பாக குருநாகல் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 400 பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான இளைய சமூகத்தினர் அதிகளவில் பதிவாகின்றனர். 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மற்றும் 30 முதல் 49 வயதுக்கு இடைப்பட்டவர்கள் அதிகளவில் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்” என அவர் குறிப்பிடுகின்றார்.
வெளிநாட்டு பணியாளர்கள், பார ஊர்தி சாரதிகள், புலம்பெயர்ந்;தோர், ஓரின சேர்க்கையாளர்கள், பீச் போய்ஸ், பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் என ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், விசேடமாக குருநாகல் மாவட்டத்தை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
”இலங்கைக்கு இது பாரியதொரு பிரச்சினை. 2020ம் ஆண்டை விட 2025ம் ஆண்டு 100 வீதத்தினால் எச்.ஐ.வி தொற்றாளர்கள் அதிகரித்துள்ளனர். 2020ம் ஆண்டு 363 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். 2025ம் ஆண்டில் சுமார் 900 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எச்.ஐ.வி தொற்று காரணமாக இதுவரை 820 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 2026ம் ஆண்டு 6 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

”குறிப்பாக எச்.ஐ.வி தொற்றாளர்களை அடையாளம் கண்டுக்கொள்வதற்காக, மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள சுயமாகவே முன்வர வேண்டும். அவ்வாறின்றி, சமூகத்தை கண்டு அச்சப்பட்டுக் கொண்டு மறைந்திருப்பது தகுந்த தீர்வாக அமையாது. மருத்துவர்களை சந்தித்து, தகுந்த சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்” என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
சர்வதேச தரவுகளின் பிரகாரம், எச்.ஐ.வி தொற்றுடன் வாழக்கூடிய சுமார் 3 கோடியே 50 லட்சத்து 48 ஆயிரத்து 580 பேர் உலகம் முழுவதும் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
(NewsMe)



















