இலங்கையின் தெற்கு கடலில் கடற்படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் ஹெரோயின் மற்றும் ஐஸ் என சந்தேகிக்கப்படும் சட்டவிரோத போதைப்பொருட்களை கடத்திச் சென்றதாக கூறப்படும் படகொன்றுடன், 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேவேந்திரமுனைக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த படகுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினர் மற்றும் கடற்படையினர் இணைந்து, இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தை அண்மித்த பகுதியில் இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைப்பதற்காக தற்போது கரைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
இந்து சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் சுதந்திரமான கடல்சார் பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில், பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளர்களுடன் இலங்கை கடற்படை பேணிவரும் வலுவான ஒருங்கிணைப்பே இந்த நடவடிக்கை வெற்றியடையக் காரணமாக அமைந்துள்ளது.
மேலும், உலகின் மிகப்பெரிய பன்னாட்டு கடற்படைக் கூட்டணியான ‘கூட்டு கடல்சார் படையில்’ (Combined Maritime Forces) இலங்கை கடற்படை அங்கம் வகிப்பதும், கொழும்பு தகவல் இணைப்பு மத்திய நிலையத்தின் ஊடாக நிகழ்நேரத் துல்லியமான தரவுகளுடன் அனைத்துக் கடல்சார் தரப்பினருக்கும் வழங்கப்படும் விழிப்புணர்வும் இதற்குப் பெரிதும் துணைபுரிந்துள்ளன.
கொழும்பு தகவல் இணைப்பு மத்திய நிலையம் ஊடாகப் புலனாய்வுத் தகவல்கள் மற்றும் கடல்சார் அச்சுறுத்தல்களை மதிப்பிடுவதற்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் உள்ளடங்கலான நவீன தொழில்நுட்பத் தரவுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
அத்துடன், இலங்கை விமானப்படையுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் கூட்டு வான்வழி கண்காணிப்பு நடவடிக்கைகளின் மூலம் கடல்சார் கண்காணிப்புப் பரப்பு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில், 2025ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் தொடர்ச்சியாகவே சர்வதேச கடற்பரப்பில் இந்த போதைப்பொருள் முறியடிப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த தேசிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, 116 பில்லியன் ரூபாவுக்கும் (11,600 கோடி ரூபா) அதிகமான பெறுமதியுடைய போதைப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், 4 வெளிநாட்டுப் படகுகள் உட்பட மொத்தம் 66 படகுகளும், 18 வெளிநாட்டவர்கள் உட்பட 379 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. (NewsMe)



















