ஆசிய வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய ‘A’ அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்திய, பவன் ரத்நாயக்க தலைமையிலான இலங்கை ‘A’ அணி, தோல்வியின்றி தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
கத்தாரின் தோஹாவில் உள்ள West End Park சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நேற்று (நவ.26) நடைபெற்ற இந்த போட்டியில், இந்திய அணி நிர்ணயித்த 318 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி 41.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து எட்டியது.
இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான லசித் குரூஸ்புள்ளே மற்றும் சினெத் ஜயவர்தன ஆகியோர் முதலாவது விக்கெட்டுக்காக 174 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறப்பான ஆரம்பத்தை வழங்கினர்.
இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் சவாலாக விளங்கிய சினெத் ஜயவர்தன, 70 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் மற்றும் 6 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக அதிரடியாக 105 ஓட்டங்களைக் குவித்தார்.
சினெத்தின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து, லசித் குரூஸ்புள்ளே அணியின் பொறுப்பை ஏற்று, இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை 35ஆவது ஓவரில் 265 ஆக உயர்த்தினார்.
12 நான்கு ஓட்டங்கள் மற்றும் 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 116 ஓட்டங்களைப் பெற்ற லசித் குரூஸ்புள்ளே ஆட்டமிழந்ததுடன், அதுவே இலங்கை அணியின் இறுதி விக்கெட்டாகவும் அமைந்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் பவன் ரத்நாயக்க மற்றும் நிஷான் மதுஷ்க ஆகியோர் ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.
நிஷான் மதுஷ்க ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், அணித் தலைவர் பவன் ரத்நாயக்க 16 பந்துகளில் அதிரடியாக 31 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியின் வெற்றியை விரைவுபடுத்தினார்.
முதற்கட்டப் போட்டிகளில் பாகிஸ்தான் அணியிடமும் தோல்வியடைந்த இந்திய ‘A’ அணி, இந்தத் தோல்வியுடன் தொடரிலிருந்து வெளியேறியது.
அதேவேளை, தொடரில் இதுவரை நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை ‘A’ அணி, இறுதிப் போட்டிக்குத் தோல்வியின்றித் தகுதி பெற்றுள்ளது. (NewsMe)


















