சீனா அரசாங்கத்தினால் தேடப்பட்டு வந்த 5 சீன நாட்டு பிரஜைகளை இலங்கை அரசாங்கம் நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.
சீனாவினால் தேடப்பட்டு வந்த ஐந்து சந்தேகநபர்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாகி வாழ்ந்து வந்திருந்தனர்.
இந்த நிலையில், குறித்த நபர்களை கைது செய்து தம்மிடம் ஒப்படைக்குமாறு சீன அரசாங்கம், இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதன்படி, குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் சோதனை பிரிவின் அதிகாரிகள் நடத்திய தேடுதல் நடவடிக்கைகளில் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சந்தேகநபர்களும் இன்றைய தினம் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவிக்கின்றது.
இலங்கையின் குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறிய வகையிலேயே, குறித்த ஐந்து சீன பிரஜைகளும் இலங்கையில் தங்கியிருந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சீன பிரஜைகளும், இரண்டு சீன விமானங்களில், 8 இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்புடன் சீனா நோக்கி அழைத்து செல்லப்பட்டுள்ளர். (NewsMe)



















